சாந்தி - வெள்ளி வென்ற தங்க மங்கை
தோஹாவில் நடைபெறும் ஆசியாத் விளையாட்டுக்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சாந்தி சவுந்தராஜன் என்ற 24 வயது வீராங்கனை, 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இரண்டாம் இடம் பெற்று (2:03:16) வெள்ளிப் பதக்கம் வென்றார். இவர் பதக்கப் பட்டியலில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ! மூன்றாவது இடத்தைப் பிடித்த கழகஸ்தானைச் சேர்ந்த விக்டோரியாவை 3/100 வினாடிகள் வித்தியாசத்தில் பின்னுக்குத் தள்ளினார்.
அவரது ஓட்டத்தை டிவியில் பார்த்தேன், நிஜமாகவே கடைசி 100 மீட்டர் அபாரமாக, புயல் போல ஒடி, அனுபவமிக்க பலரை பின்னுக்குத் தள்ளி, இந்த சாதனையைப் புரிந்தார் !!! பார்வையாளர்கள் கூட்டத்தில் இருந்த பெருவாரியான இந்தியர்கள் தன்னை உற்சாகப்படுத்தியது, பதக்கம் பெற வேண்டும் என்ற தனது உத்வேகத்தை அதிகப்படுத்தியது என்று சாந்தி கூறியிருக்கிறார். தனது பயிற்சியாளர் நாகராஜனையும் வெற்றிக்கு முக்கியக் காரணமாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு, சாந்தியின் இந்த மகத்தான சாதனையை பாராட்டி அவருக்கு 15 லட்ச ரூபாயை பரிசாக அறிவித்துள்ளது.
புதுக்கோட்டையில், ஓர் ஏழைக் குடும்பத்தில் (மொத்தம் ஏழு பேர்) பிறந்த சாந்தி, முதலில் ஓடத் தொடங்கியதே தனது குடும்பத்தின் வருமானத்தைப் பெருக்கத் தான். ஏனெனில், அவரது (கூலி வேலை பார்க்கும்) தாயாரின் சொற்ப வருமானத்தில் சாந்தியின் குடும்பம் வறுமையின் கொடுமையில் வாடியது. இதய நோயில் வாடும் அவரது தந்தை, வேலைக்குச் செல்ல முடியாத சூழல் !
சென்ற வருடம், பிப்ரவரி மாதம் சென்னையில் நடந்த மராத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டு, மூன்றாவது இடம் பெற்றதில், சாந்திக்கு ரூ.25000 கிடைத்தது. அதைக் கொண்டு அவரது நான்கு தம்பி தங்கைகளின் கல்விச் செலவை சமாளித்தார். பின்னர், பெடரேஷன் கோப்பை 800 மீ ஓட்டத்தில், முதலிடம் வந்து தங்கம் வென்றார். அதன் பின்னர், செப்டம்பர் 2005-இல் நடந்த ஆசிய தடகளப் போட்டிகளில், 800 மீ ஓட்டத்தில், வெள்ளிப் பதக்கம் வென்றார். மிகுந்த குடும்ப கஷ்டங்களுக்கிடையில், அயரா முயற்சியோடு, படிப்படியாக முன்னுக்கு வந்த சாந்தியை, எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
ஒரு தடகள வீராங்கனைக்கு, சரியான சத்துணவு மிக அவசியமானது. ஆனால், அவரது குடும்பமே அவரை நம்பியிருக்கும் சூழலில், சாந்தி பல நேரங்களில் பட்டினி கிடந்திருக்கிறார். தற்போது மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு பயிலும் சாந்தி, தனது ஓட்டப்பந்தய வெற்றிகள் தனக்கு ஒரு நல்ல வேலையைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையோடு உள்ளார்.
என்றென்றும் அன்புடன்
பாலா
*** 269 ***
9 மறுமொழிகள்:
Test Comment !
பதக்கத்திற்காக மட்டுமல்லாமல் உணவுக்காகவும் சேர்த்தே ஒட வேண்டிய ஒரு நிலை, சோகம்தான்.
ஒரு நல்ல வேலை கிடைக்க வாழ்த்துக்கள்.
இப்பொழுதுதான் பத்திரிகையில் இந்த செய்தியை படித்தேன்.
இதை பதிவாக போட்ட உங்களுக்கு நன்றி!
http://www.hindu.com/2006/12/11/stories/2006121105310100.htm
வறுமையின் கொடுமையிலும் விடா முயற்சியோடு முன்னுக்கு வந்த சாந்தி நம்மில் பலருக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்வார் என்ற நம்பிக்கையுடன்,
யாராவது சாந்தியின் முகவரியை பின்னூட்டமாக இடுங்களேன். வாழ்த்துக்களை அனுப்பலாம்.
நன்றி!
-BNI
சாந்திக்கு வாழ்த்துக்கள்!
மேலும் மேலும் வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துக்கள்!!
ஒரு நெகிழ வைக்கும் புகைப்படம் இன்றைய இந்து பத்திரிக்கையில்.
பார்க்க:
ஆதிபகவன், BNI, sivabalan, ஓகை,
வருகைக்கு நன்றி.
ஓகை,
அவரது பெற்றோர் பேசியதை தொலைக்காட்சியில் பார்த்தேன்.
சாந்திக்கு வாழ்த்துக்கள்
முதல் வருகைக்கு நன்றி, மங்கை !
Good and inspiring posting. Congrats.
Murali Manohar
Post a Comment